Friday, 27 May 2011
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 5 பேர் முதலிடம்
சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி உள்பட 5 மாணவ, மாணவியர் 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர்.
முதலிடம் பிடித்தவர்கள்
செய்யாறு மின்னலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நித்யா, கோபிச்செட்டிப்பாளையம், ரம்யா, சேலம் சங்கீதா, சென்னை திருவொற்றியூர் ஹரிணி.
11 பேர் 2வது இடம்
சேலம் மாவட்டம் மல்லூர் வெற்றி விகாஸ் பள்ளி மாணவி விக்னேஸ்வரி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைப் போல மேலும் 10 மாணவ, மாணவியர் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
24 பேருக்கு 3வது இடம்
494 மதிப்பெண்களைப் பெற்று 24 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகளை தட்ஸ்தமிழ் இணையதளத்தில் விரைவில் காணலாம்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.
பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.
இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாயின.
மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தட்ஸ்தமிழ் மற்றும் அரசு இணையத் தளங்களிலும் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
மெட்ரிகுலேஷனில் 4 பேர் முதலிடம்
மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் 4 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஜெயபாரதி, ஈரோடு மாவட்டம் ஹர்ஷினி, தர்மபுரி மாவட்டம் அனிதா, செங்கல்பட்டு மாவட்டம் அனிக்ஷா ஆகியோர் தலா 493 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
12 பேருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 22 பேருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியவர்களில் 94.7 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர்.
ஆங்கிலோ இந்தியன் பாடப் பிரிவில் தேர்வு எழுதியவர்களில் 95.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 92.6 சதவீதம் பேரும், மாணவியர் 97.60 சதவீதம் பேரும் பாஸாகியுள்ளனர்.
ஜூன் 20ம் தேதி மதிப்பெண் பட்டியல்
மதிப்பெண் சான்றிதழ்கள் ஜுன் 20ம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டல் விண்ணப்பம்
மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை வருகிற 30ம் தேதி முதல் ஜுன் 3ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 3ம்ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, மொழி பாடங்களுக்கு மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.305. இதர பாடங்களுக்கு ரூ.205. மெட்ரிக் பாடத்திற்கு ரூ.305. ஆங்கிலோ-இந்தியன் மொழிப்பாடத்திற்கு ரூ.205. மற்ற பாடங்களுக்கு ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும்.
சிறப்பு துணைத் தேர்வு
தேர்வில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம். பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் பள்ளி மூலமாக வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்திசெய்து பள்ளியில் ஜுன் 3ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
மார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், 2011க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு கட்டணம் ரூ.125. மெட்ரிக் ஒரு பாடத்திற்கு ரூ.135. இரண்டு பாடங்களுக்கு ரூ.235. மூன்று பாடங்களுக்கு ரூ.335.
ஆங்கிலோ- இந்தியன் தேர்வுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.85. இரண்டு பாடங்களுக்கு ரூ.135. மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு ஜுன் 30ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 9ம்தேதி வரையும் நடைபெறும்.
Labels:
செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment